Friday, June 30, 2006

கனடாவில் உள்ள வலைபதிவர்களே...

நான் மான்ட்ரியாலில் இருக்கிறேன். கனடா வலைபதிவர்களே, நான் சந்தித்து உரையாடலாமா?
சென்னையிலும், பெங்களூரிலும் சக்கை போடு போடுகிறார்கள். இங்கே நாம் சந்தித்தால் என்ன?. உள்ளபடியே, நான் வலைபதிவர்களில் திரு. கால்கேரி சிவா அவர்களிடம் மட்டுமே தொலைபேசியில் பேசி இருக்கிறேன். வலைபதிவர்கள் சந்திப்பு பற்றி பதிவுகள் இப்போது ஆசையை தூண்டி விட்டுள்ளன.

வலைபதிவு என்பது நம்முடைய ஒரு பரிணாமம் மட்டுமே. வலைபதிவாளர்கள் சந்திப்பு நமக்கு மற்ற பதிவர்களின் பல முகங்களையும் காட்டும். பலர் கூடி கலந்து பேசினால், உபயோகமான கருத்து பரிமாற்றங்கள் கூட நடக்க நிறைய வாய்ப்பு உண்டு.


கனடா பதிவர்கள் சந்திப்புக்கு முயற்சித்தால் என்ன? கனடா வலைபதிவர்களே, உங்கள் கருத்துக்களை தெரிவிங்கள். தினத்தையும் இடத்தையும் திட்டமிடலாம்.

ஆவலோடு உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Thursday, June 29, 2006

வந்தாச்சு...

விடுமுறை முடிந்து சென்ற வாரம் மான்ட்ரியால் திரும்ப வந்துவிட்டேன். இந்த முறை 3- 5 மாதங்கள் வரை இங்கு இருப்பேன். இதனால் தான் ரெகுலராக எழுதாமல் இருந்தேன். நிறைய பதிவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனாலும் குழலி, டோண்டு , முத்து(தமிழினி) போன்றவர்கள் தான் இன்னமும் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார்கள்.

முடிவடைந்திருக்கும் என்று நான் கருதிய போலி டோண்டு சீரியல் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காசி தமிழ்மணத்திற்கு புதிய பொறுப்பாளர் தேடி கொண்டிருக்கும் நேரத்தில் அவர் செய்த சேவையை பாராட்டி எழுதுவது , தமிழ்மணத்தின் பயன்களை பெற்றவன் என்கிற முறையில் ஒரு முக்கிய கடமையாகி விடுகிறது. என்ன காரணத்தினால் இந்த முடிவிற்கு அவர் வந்திருந்தாலும், தமிழ்மணம் அவருக்கு முழு திருப்தி அளித்திருக்கும். அவருடைய பங்களிப்பு ஒரு பதிவராக தொடரும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் அரசியல் மாற்றம் எதையும் காண முடியவில்லை. எஸ்கே என்ன தான் நம்பிக்கை தெரிவித்தாலும் விஜயகாந்த் கட்சி ஒரு மாற்றாக எனக்கு தோணவில்லை. மற்றொரு அ.தி.மு.க, பா.ம.க, தி.மு.கவாக மட்டுமே அது காட்சி அளிக்கின்றது. ஆனாலும் விஜயகாந்த் கட்சியை நடத்தும் விதத்தில் ஒரு நேர்த்தியான திட்டமிடல், தைரியம் , விடாமுயற்சி தெரிகின்றது. கலைஞருக்கு அப்புறம் ஒரு கடுமையான உழைப்பாளியை தமிழகம் காண்கின்றது.


ரஜினி ரசிகர் மன்றத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்த்துள்ளது. ரசிகர்கள் நடிகர்களை நம்பினால் என்ன ஆகும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டுள்ளனர். அஜீத் மிரட்ட பட்டதும் அதற்கு அவர் எதிர்ப்பு முறையாக தெரிவிக்காததும், நடிகர்கள் நிஜவாழ்க்கையில் எந்த அளவு தைரியமாக உள்ளனர் என்பதை காட்டுகிறது.

மேலும் சந்திப்போம்.

Friday, June 09, 2006

இட ஒதுக்கீடும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டும்

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கபட வேண்டும் என்று ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் இணையத்தில் பல பதிவுகளில், பல பின்னூட்டங்களில் இந்த கருத்து அல்லது யோசனை கூறப்பட்டுள்ளது.

1. ஒருவருடைய பொருளதார சூழ்நிலை என்பது மாறிக் கொண்டே இருக்கின்ற ஒன்று.ஒருவர் வளர்ந்த நிலைமையை கணக்கில் கொள்வீர்களாக அல்லது தற்போதைய நிலைமையை மட்டும் கணக்கில் எடுப்பீர்களா?

2. உண்மையில் பொருளாதார நிலைமை என்பது கணிப்பதற்கு மிகவும் சிரமமான ஒன்று. ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கின்றார் , எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை ட்ராக் பண்ணுகின்ற வழி இருந்தால் அதை முதலில் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கு தெரிய படுத்துங்கள். அவர்கள் சரியான வருமான வரியை வசூல் செய்ய முடியும். அந்த ஒரு நிலைமை வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியான முறையில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமாகும்.

இந்த இரண்டு விஷயங்களும் இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் வேண்டுபவர்கள் மனதில் கொள்ள வேண்டியவை.

Thursday, June 08, 2006

விகடன் உண்மையில் யார் கையில் உள்ளது?

தேர்தலுக்கு முன்னர் விகடன் பத்திரிக்கைகளை சன் டீவி நிறுவனத்தினர் வாங்கி விட்டதாக வைகோ குற்றம் சாட்டினார். விகடன் இதனை முற்றிலுமாக மறுத்தது. விகடனை தி.மு.க வினர் சமீபத்தில் கொளுத்திய போது அதை ஜெயா டீவி நாடகம் என்று வர்ணித்துள்ளது. இதற்கும் விகடன் விளக்கம் கொடுத்துள்ளது.

விகடன் கை மாறியிருந்தால் அதுவும் சன் நிறுவனத்திடன் சென்றிருந்தால் அது உண்மையில் தமிழ் பத்திரிக்கை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு.சன் நிறுவனத்தினால் எதையும் இலாபகரமாக நடத்த முடியும். ஆனால் அவர்களுடைய நடுநிலைமையும் தரமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. விகடன் பத்திரிக்கையை வாங்கியது வெளியில் தெரிந்தால் அதனுடைய நடுநிலைமை இமேஜ் பறி போய்விடும் என்பதால் சன் நிறுவனம் இதனை இரகசியமாக வைத்துள்ளது என்பது ஜெயா டீவில் வைக்க பட்ட குற்றசாட்டு.

சன் டீவி இதுவரை தாங்கள் வாங்கிய அல்லது துவங்கியஎதையும் வெளிப்படையாக செய்துள்ளனர் என்றாலும் என்னை சந்தேகபட வைப்பது தி.மு.க நடத்திய போராட்டம். விகடனை எரிக்கும் அளவிற்கு விகடனில் தி.மு.கவை அல்லது கருணாநிதியை தாக்கி செய்தி வெளி வரவில்லை.இதுவரை சன் நிறுவனமும் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.