இந்த படத்தில் ஆபாசமான வசனங்களோ, நடிகையின் உடலை வெளிச்சம் போடும் காட்சிகளோ இல்லை. ஆனால் படம் வெளியாவதற்கு முன்னர் வந்த வசனம் வக்கிரத்தின் உச்சகட்டம். படத்தினை வடிவேலு வெளிப்படையாகவே எதிர்த்திருக்கிறார். அவர் விட்ட வார்த்தைகளும் அதற்கு பதிலாக பட இயக்குனர் விட்ட வார்த்தைகளும் மிகவும் அதிகம். அடிப்பேன், அரை வேக்காடு என்பது விமர்சனமே அல்ல.
ஒரு ஆண் தன் துணையை இழந்த பின்னர் மற்றொருவருடன் அல்லது மனைவியின் தங்கையுடன் வாழ்க்கை தொடரும் போது, ஒர் பெண் செய்ய கூடாதா என்ற நியாயமான கேள்வியை இயக்குனர் தந்திரமாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. பதிவுலகில் சிறிது நாட்களுக்கு முன்னர் விதவைகள் இல்லாத கிராமம் என்று ஒரு பதிவு வந்தது இங்கு குறிப்பிட தக்கது.
மரணம் என்கின்ற தலைப்பில் போட்டி நடந்து முடிந்திருக்கிற நேரம், இப்போது மரணம் பற்றி பேச வேண்டியுள்ளது. வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒர் துணை தேவைப்படத்தான் செய்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு துணையுடன் வாழும் பாக்கியம் கிடைப்பதில்லை. துணை மறைந்து விட்டதால் வாழ்க்கை வரண்டு விட வேண்டுமா?. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இன்னோர் துணை தேடி கொண்டால் என்ன?மணல் கயிறு படத்தில் எஸ்.வி.சேகர் இதனை ஒரு நிபந்தனையாக வைப்பார் அவருக்கு பெண் தேடும் போது.
துணையுடன் இருக்கும் போது யார் மீது கவனம் திரும்பினாலும் அது தவறு தான். ஆனால் அதற்காக வாழ்க்கையை வீணாக்கி கொள்ள வேண்டுமா ஒர் துர்சம்பவம் நடந்து விட்டால். இந்த சமூகம் பெண்ணிற்கு மறு வாழ்வு தர தயங்கதான் செய்கிறது. என்னுடைய பெரியப்பா மகள் கணவனை இழந்த போது நடந்த சடங்குகளை கண்டிக்கவோ, தடுக்கவோ என்னாலோ, எனது அண்ணலோ முடியவில்லை. இதில் இவை கட்டாயம் நடக்க வேண்டும் என்று கணவன் வீட்டு மக்கள் வற்புருத்தல் வேறு. வருடம் பல ஓடியும், அக்கா மனம் மாறவில்லை. இந்த சடங்குகளை எப்படி தான் தாங்குகிறார்களோ பெண்கள்.
பெண்களுக்கும் உணர்வு உண்டு, அவர்களுக்கும் வாழ்க்கையில் துணை மறைந்தால் மற்றோர் துணை தேவை என்ற ஒன்றை பாசிட்டிவாக காட்ட வழிகள் பல இருக்கின்றன. அதாவது எதிர்பாராத சூழ்னிலையில் அண்ணன் மறைந்து விட தம்பி, அண்ணியின் மீதும் குழந்தைகள் மீதும் கொண்ட ஆர்வத்தினால் காதலை தியாகம் செய்து அண்ணியை மனைவியாக ஏற்று கொள்கிறார். இதற்கு காதலியும், பெற்றொர்களும் துணையாக இருக்கிறார்கள் என்று கூட கதை கற்பனை செய்யலாம். முயற்சி செய்தால் இந்த கதைக்கும் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கலாம். ஆனால் உயிர் கொஞ்சம் நெகடிவ்வாக அமைந்து விட்டதோ என்று தோன்றுகிறது.
3 comments:
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சாமி பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்திருப்பதாகக் கூறி பெண்களைச் சிறுமைப்படுத்தியுள்ளார். எனக்குத் தெரிந்து என் பெற்றோர்களின் காலத்திலேயே கணவன் இறந்ததும் அண்ணி தன் கணவனின் தம்பியைக் குழந்தைகளுடன் திருமணம் செய்து மேலும் குழந்தைகள் பெற்று வாழ்ந்திருக்கின்றார். இது நடந்தது நாற்பதுகளிலென அறிந்திருக்கின்றேன். இத்தகையதொரு சூழலில் உயிர் ப்டத்தில் இயக்குநர் சாமி அண்ணி பாத்திரத்தைத் தேவையற்று இறுதியில் அவளுயிரை எடுப்பதற்கு வாய்ப்பாக வில்லித்தனமாகப் படைத்திருப்பபதன் மூலம் அந்தப் பெண்ணின் நியாயமான உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றார். அத்துடன் தேவையற்று விரசமான உரையாடல்கள் மூலம் மேலும் அந்தப் பாத்திரத்தைச் சிறுமைப்படுத்தியிருக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் கதையில் எதிர்பாராத விததில் கணவனை இழந்த பெண்ணின் நியாயமான உணர்வுகளை நேர்மையாக வடித்திருப்பதன் மூலம் உண்மையிலேயே நியாயமான பெண்ணியக் குரலாக இத்திரைப்படத்தை ஒலித்திருக்கச் செய்திருக்கக் கூடிய வாய்ப்பினை இயக்குநர் இழந்திருக்கின்றார். அத்துடன் பெண்களுக்காகக் குரல் கொடுக்கிறேனென்று அவர்கள் மேல் சேற்றினை வாரியிறத்திருக்கின்றார்.
அது சரி. விட்டால் நீங்களே போய் அவர்களுக்கு விருது கொடுத்து கௌரவிப்பீர்கள் போல் இருக்கிறதே. தமிழ் கலாச்சார காவலாளிகள் உங்களை கவனிப்பார்களாக!
ஒரு படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும். இந்த கருத்தை சஞ்சீத் அவர்களின் இந்த பதிவில் கானலாம்.
தங்களது கருத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறேன்.
இப்படத்தைப் பார்க்காமலே எல்லோரும் உளறிக் கொண்டிருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. இப்படத்தில் மச்சினனின் மேல் கொண்ட காமத்தில் கணவனையே ஏசுகிறாள் அந்தப் பெண். அதனால் கணவன் தற்கொலை செய்த பின் மச்சினனை மணம் முடிக்க சதி செய்கிறாள். இதில் எங்கேய்யா வந்து சேர்ந்தது பெண்ணுரிமையும் மறுமணமும்.
Post a Comment