Wednesday, July 26, 2006

அரசு சர்வாதிகார முகத்தை தொடங்கியுள்ளது.(???)

இவ்வாறாக வர்ணித்துள்ளது ஜூனியர் விகடன். எதை தெரியுமா?. சற்றே முன்னர் வலைபதிவுகள் தடை செய்யபட்டதை. முதலில் வலைப்பதிவுகள் தடை என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அது தற்காலிகமானது. மேலும் ஒரு சில வலைபதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து தடை செய்வதில் இருந்த நடைமுறை பிரச்சினைகளை மனதில் கொள்ளாமல் இவ்வாறு விமர்சனம் செய்வது சரியா?
வலைபதிவுகள் என்பது இன்னமும் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பார்க்கபடுகிற, ஒரு சிலர் மட்டிமே கலந்து கொள்கின்ற ஒன்று. பல தேசநலன் கருதிய காரணங்களுக்காக இணையத்தில் கட்டுபாடு எடுக்க அரசு முயலும் போது, சில விஷயங்கள் சற்றே அதிகப்படியாக அமையலாம். நோக்கத்தை மனதில் கொண்டு மக்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
நாட்டின் நலன் கருதி செய்யபடுகின்ற காரியங்களை , சற்றே சிரமங்கள் இருந்தாலும் மக்கள் அதனை பொருட்படுத்த கூடாது. இவ்வாறு கூப்பாடு போடுகின்ற பத்திரிக்கைகள் உண்மையில் அடிப்ப்டையான உரிமைகள் சமூகத்தின் பல பிரிவினருக்கு வழங்கபடாத போது எங்கே போயின?
வலைப்பதிவுகள் சில நாட்கள் தடுக்கபட்டதால் என்ன கெட்டது நேர்ந்து விட்டது? ஒரு சில வசதி குறைவை தவிர வேறு ஏதுவும் பெரிதாக நடந்து விடவில்லையே. எல்லாவற்றையும் விட இது சர்வாதிகாரம் என்று அழைப்பது சரியா?
நடுவர் மன்றம் தீர்ப்பை மதிக்காத அரசாங்கம் இங்கு இல்லையா?. இந்த அரசாங்கங்கள் இவ்வாறு கண்டிக்க பட்டனவா? தமிழ் தொலைக்காட்சி சானல்கள் தடுக்கபடவில்லையா? அப்போது இந்த வார்த்தைகள் வரவில்லையே? பெருந்தலைவர்கள் கைது செய்யபடும்போதோ அல்லது பெருந்தலைவர்கள் மறைந்த போதோ சமூகமே பாதிக்கபட்டதே.. அப்போது இந்த வார்த்தைகள் வரவில்லையே!!
ஒரு தனி மனிதனின் சுதந்திரம் என்பது சமூக நலனுக்கு கட்டுபட்டதே. நாட்டிற்காக நாம் சில சமயங்களில் அதை தியாகம் செய்தவதை பொருட்படுத்த கூடாது. பெருந்தவறுகளை கண்டும் காணாதது போல இருந்து விட்டு, அல்லது அடுத்த வீட்டுகாரரிடம் , எதிர்த்து வீட்டு காரரிடம் விவாதித்து விட்டு, பதிவில் கிண்டலடித்து விடுவதையே நாம் சமுக பொறுப்பாக கருதுகிறோமா?
பெரிய தவறுகளுக்கு வாய் திறக்காமல் , சும்மா ஒண்ணும் இல்லாத பிரச்சினைக்கு ஒரு வாய்ஸ் கொடுத்து விட்டு, உதார் விட்டு திரியும் வாய்ச்சொல் வீரர்களாகி விட்டோமா நாம்...
ஐ.டி. தொழில் ஒரு பணக்கார, சமூக அக்கறை இல்லாத கூட்டத்தை உருவாக்குகிறது என்று எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.நாட்டின் நலன் கருதி பதிவுகள் தடை செய்யபட்டதற்கு வருகின்ற ஒவர் ரியாக்ஷன்கள் எரிச்சலையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் ஒரு பிரபல பத்திரிக்கை இவ்வாறு இதனை சித்தரித்திருப்பது இவர்கள் மற்ற விஷயங்களை எவ்வாறு விவரிக்கிறார்கள் என்பதற்கு எடுத்து காட்டாக அமைந்திருக்கிறது.

7 comments:

மு. மயூரன் said...

நீங்கள் சொல்வது எவ்வளவு ஆழமான, காட்டமான கருத்துக்கள்.
இதுகூட புரியாத அக்கறை இல்லாத இந்திய அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் சீனாவையும் வடகொரியாவையும் ஏதோ இரும்புத்திரை நாடுகள் என்று தாக்கி எழுதிக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாட்டைகாக்க மக்கள் எவ்வளவு சுதந்திரத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யவேண்டும். அதுதான் கடவுளுக்கு பிடிக்கும். நாட்டை காக்க அரசு கொண்டுவரும் தடைச்சட்டங்களை சும்மா அறிவில்லாமல் சர்வாதிகாரம், மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம் என்று கத்தி காரியத்தை கெடுக்கக்கூடாது.

சீனா வடகொரியா போன்ற நாடுகளை ஆதரித்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

பாலசந்தர் கணேசன். said...

இல்லை மயூரன். சரியாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. வலைபதிவுகளேயே காலி பண்ணும் நோக்கத்தோடு இந்திய அரசாங்கம் செயல்பட்ட மாதிரி தெரியவில்லை. சில தளங்களை தடை செய்ய விரும்பி இருக்கிறார்கள். ஆனால் நடைமுறை சிக்கலில் மொத்த பதிவுகளும் சில நாட்கள் அமுக்க பட்டன. இது தான் நடந்திருக்கிறது. இதை சர்வாதிகாரம் என்று கூறுவதோ , இல்லை கருத்து சுதந்திரத்திற்கு வந்த ஆபத்தோ என்று வர்ணிப்பது மிகையானது என்பது தான் எனது கருத்து.

பின்னூட்டத்திற்கு நன்றி

கோவி.கண்ணன் said...

கனேசனுக்கு ஒரு 'ஓ'

dondu(#11168674346665545885) said...

என்னுடைய இப்பதிவைப் பாருங்கள். http://www.pkblogs.com/dondu/2006/07/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். said...

கருத்துக்கு நன்றி டோண்டு சார் அவர்களே,

மு. மயூரன் said...

குறிப்பிட்ட தளங்கள் ஏன் தடை செய்யப்பட்டன என்றும், எந்தெந்த தளங்கள் தடைசெய்யப்பட்டன என்றும் தடைக்குமுன் அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்ததா?

எந்த முன்னறிவித்தலும் இல்லாமல் எதேச்சாதிகாரமாக இப்படியான தடைகள் கொண்டுவருவது ஜனனாயகம் அல்ல.

ஒரு நாடு/அரசாங்கம் எப்போது மக்களுடைய நாடாக அல்லாமல் ஒரு சில வர்க்கங்களுக்கான நாடாக/அரசாங்கமாக மாறுகிறதோ, அப்போது அது அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இந்த நிலையை இந்தியா அடைந்துள்ளது.
இதன் அடுத்த வளர்ச்சிக்கட்டம் தன்னாட்டு மக்களை சர்வாதிகாரத்துக்கு உட்படுத்துவது. அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டது.

தடைசெய்யப்பட்ட தளங்களை நான் பார்த்தேன். ஏன் தடை செய்யப்பட்டன என்றே புரியவில்லை. அதில் மிக முற்போக்கான கருத்துக்களை கொண்டுள்ள தலித் தேசமும் ஒன்று.

அடுத்தடுத்து இந்துத்துவத்திற்கு எதிரான, இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் கூட நசுக்கப்படலாம். ஏற்கனவே பொடா சட்டம் பெரிய ஜனநாயக மறுப்பு.


அறிந்த சர்வாதிகார முகங்கள் மிகச்சொற்பம். அறியாதவை ஏராளம்.

பாலசந்தர் கணேசன். said...

சந்தேகத்தின் பெயரினால் அரசாங்கம் செயல்படும் போது தவறுகள் நடப்பது சகஜமே. கோர்ட் மாதிரி முழு ஆதாரம் இருந்தால் மட்டுமே தண்டனை கொடுப்பேன். இல்லாவிட்டால் விடுதலை செய்வேன் என்று அரசு நடைமுறையில் செயல்பட முடியாது. தீவிரவாதத்திற்கு தண்டனை என்ன என்பதை நீங்கள் கூறுங்களேன்.!!!